உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான விராட் கோலி டெஸ்டில் 1205 நாட்களுக்கு பிறகு சமீபத்தில் சதம் அடித்தார். இதன் மூலம் தன்னை விமர்சித்தவர்களுக்கு அவர் சரியான பதிலடி கொடுத்தார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அகமதாபாத்தில் நடந்த 4-வது டெஸ்டில் அவர் 186 ரன்கள் குவித்தார். இதற்கு முன்பு 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்டில் செஞ்சூரி அடித்து இருந்தார்.
இரண்டாவது இடத்தில் கோலி
34 வயதான விராட் கோலி டெஸ்டில் 28-வது சதத்தை பதிவு செய்தார். ஒருநாள் போட்டியில் 46 சதமும், 20 ஓவரில் ஒரு செஞ்சூரியும் அடித்து இருந்தார். சர்வதேச போட்டிகளில் அவர் மொத்தமாக 75 சதம் (28+46+1) அடித்து டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக 2-வது இடத்தில் உள்ளார். டெண்டுல்கர் 100 சதம் (டெஸ்ட் 51 + ஒருநாள் போட்டி 49) அடித்து முதல் இடத்தில் உள்ளார்.

1989 முதல் 2013 வரை 23 ஆண்டு காலம் அவர் சர்வதேச போட்டிகளில் விளையாடினார். இந்த நிலையில் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்து விராட் கோலி 110 சதங்கள் வரை குவிப்பார் என்று பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீரரான சோயிப் அக்தர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சோயிப் அக்தர் கூறுவது
ராவல் பிண்டி எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்படும் அவர் இது தொடர்பாக கூறியதாவது:-
விராட் கோலி மீண்டும் நல்ல நிலைக்கு திரும்பியுள்ளார். கேப்டன் பதவியின் அழுத்தம் அவர் மீது இருந்தது. தற்போது அவர் மனதளவில் சுதந்திரமாக இருக்கிறார். அவர் மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. விராட் கோலி 110 சதங்கள் அடித்து டெண்டுல்கரின் 100 சர்வதேச சதங்கள் சாதனையை முறியடிப்பார்.

அவர் ஆக்ரோஷமாக ரன்களை குவிப்பார். என்னை பொறுத்தவரை சச்சின் டெண்டுல்கரே எனக்கு பிடித்தமான வீரர் ஆவார். சச்சின் விக்கெட்டை வீழ்த்துவேன் என்று சக வீரரிடம் ஒருமுறை சொன்னது நினைவு இருக்கிறது. அப்போது நாங்கள் கொல்கத்தாவில் ஆடிக் கொண்டிருந்தோம். முதல் பந்திலேயே 1 லட்சம் ரசிகர்கள் முன்னிலையில் டெண்டுல்கர் விக்கெட்டை வீழ்த்தினேன். எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது. டெண்டுல்கர் பெவிலியன் திரும்பிய பிறகு மைதானம் பாதி காலியாகி விட்டது. இவ்வாறு சோயிப் அக்தர் கூறியுள்ளார்.
இதை படிக்க :- மகளிர் பிரீமியர் லீக்: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி குஜராத் ஜெயண்ட்ஸ் அணி வெற்றி..!