Breaking News

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி முடிந்த பின்னர் ஹர்திக் பாண்ட்யா இந்திய அணியின் கேப்டனாக கூடிய சாத்தியம் – கவாஸ்கர் சொல்கிறார்..!

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் முதலாவது ஆட்டம் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நாளை நடக்கிறது.

இந்திய கேப்டன் ரோகித் சர்மா குடும்ப நிகழ்ச்சி காரணமாக முதலாவது ஒரு நாள் போட்டியில் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக தொடக்க ஆட்டத்தில் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா அணியை வழிநடத்த உள்ளார்.

கவாஸ்கர் கூறுவது

இது தொடர்பாக இந்திய முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் அளித்த ஒரு பேட்டி வருமாறு :-
“20 ஓவர் கிரிக்கெட்டில் ஹர்திக் பாண்ட்யாவின் கேப்டன்ஷிப் என்னை வெகுவாக கவர்ந்துள்ளது. ஐ.பி.எல்.-ல் குஜராத் டைட்டன்ஸ் அணியையும், சமீபத்திய சர்வதேச 20 ஓவர் போட்டியில் இந்திய அணியையும் சிறப்பாக வழிநடத்தினார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் அவர் வெற்றியை தேடித்தந்தால், அதன் பிறகு அக்டோபர்-நவம்பரில் நடக்கும் 50 ஓவர் உலகக் கோப்பை போட்டி முடிந்ததும் அவர் இந்திய அணியின் கேப்டனாகி விடுவார். தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு வீரர் ஹர்திக் பாண்ட்யா. மிடில் வரிசையில் ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடிய திறமைசாலி.

குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடிய போது, குறிப்பிட்ட ஆட்டங்களில் அணிக்கு அதிரடியும், உத்வேகமும் தேவைப்பட்ட சமயத்தில் அதை உணர்ந்து முன்வரிசையில் களம் இறங்கி விளையாடினார். மற்ற வீரர்களிடம் கேட்காமல் அணியை முன்னெடுத்து செல்ல தானே பொறுப்பை எடுத்துக் கொண்டு செயல்படுவது என்பது மிகவும் முக்கியமாகும்.

ஒரு கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா சக வீரர்களை கையாளும் விதமும், அரவணைத்து செல்வதும் அவர்களை உற்சாகமான மனநிலையில் வைத்துக் கொள்ள உதவுகிறது. அது தான் முக்கியம். அத்தகைய சூழலில் தான் வீரர்கள் தங்களது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும்.”

இவ்வாறு கவாஸ்கர் கூறியுள்ளார்.

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *